‘லவ்’ விமர்சனம்

57

நடிகர்கள் : பரத், வாணி போஜன், ராதாரவி, விவேக் பிரசன்ன, டேனியல் போப், ஸ்வயம் சித்தா
இசை : ரோனி ஃரேபெல்
ஒளிப்பதிவு : பிஜி முத்தையா
இயக்கம் : ஆர்.பி.பாலா
தயாரிப்பு : ஆர்.பி.பாலா, கெளசல்யா பாலா

பரத் – வாணி போஜன் தம்பதி இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. அப்படி ஒரு சண்டை கைகலப்பாக மாறும் போது வாணி போஜன் தலையில் அடிபட்டு இறந்து விடுகிறார். மனைவி பிணத்தை வீட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு பரத் எஸ்கேப் ஆக நினைக்க, வீட்டுக்கு வெளியே வாணி போஜன் உயிருடன் நிற்கிறார். பிணமாக இருக்கும் வாணி போஜன் நிஜமா? அல்லது உயிருடன் வந்து நிற்கும் வாணி போஜன் நிஜமா? என்ற குழப்பத்திற்கான விடை தான் ‘லவ்’ படத்தின் மீதிக்கதை.

பரத்தும், வாணி போஜனும் ஏற்கனவே கணவன், மனைவியாக நடித்திருப்பதால் இதில் மிக சுலபமாக தம்பதியாக நடித்திருக்கிறார்கள். போட்டி போட்டு நடிப்பதை விட போட்டி போட்டு இருவரும் அடித்துக்கொள்ளும் காட்சிகள் தான் அதிகம். ஒரு கட்டத்தில் வாணி போஜன் பிணமாகவும், பரத் அமைதியாகவும் இருக்க வேண்டிய சூழலில் முடிந்த அளவுக்கு நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

பரத்தின் நண்பர்களாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா மற்றும் டேனியல் போப் இருவரும் வழக்கமான வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். ராதாரவி மற்றும் ஸ்வயம் சித்தா ஒரு காட்சியில் மட்டுமே வந்து போகிறார்கள்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் முழு கதையும் நகர்ந்தாலும் வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியிருகிறார்.

ரோனி ரெபலின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே சுமார் ரகமாக இருப்பதோடு, எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.பி.பாலா, ஒரு வீட்டுக்குள் நடக்கும் க்ரைஸ் சஸ்பென்ஸ் ஜானர் கதைக்களத்தை எந்தவித சஸ்பென்ஸும், விறுவிறுப்பும் இல்லமால் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

வீட்டுக்குள் பிணமாக இருக்கும் வாணி போஜன், கதவை திறந்ததும் உயிருடன் நிற்பது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு என்ன நடக்கும்? என்பதை சுலபமாக யூகித்து விட முடிகிறது. அதே சமயம், இறந்த வாணி போஜன் எப்படி உயிருடன் இருக்கிறார், என்பதையும் சுவாரஸ்யமாக சொல்லாதது படத்தை தொய்வடைய வைக்கிறது.

ரேட்டிங் 2.5/5