வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி கடைசியாக பேப்பர் ராக்கெட் எனும் வெப்சீரிஸை இயக்கியிருந்தார். தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரவி மோகன் (ஜெயம் ரவி), நித்யா மேனன், யோகி பாபு, வினய், மனோ,லட்சுமி ராமகிருஷ்ணன், டிஜே பானு மற்றும் பலரை நடிக்க வைத்து இயக்கி வெளியாகியிருக்கும் படம் காதலிக்க நேரமில்லை.
படத்தின் கதை
இரண்டு வெவ்வேறு ஜோடிகளின் அறிமுகத்தோடு தொடங்குகிறது. இனி தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி படம் தொடங்குகிறது சித்தார்த் (ரவி) தனது நண்பர்களான வினய் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து தங்களது விந்தணுவை சேமித்து வைக்க முடிவு செய்கின்றனர். அப்போது ரவியின் விந்தணு தவறுதலாக டோனர் லிஸ்ட்டில் சேர்க்கப்படுகிறது கட்டமைப்பு பொறியாளரான ரவி மோகன் மாடல் அழகியான நிரு என்ற நிறுபமா (TJ பானு) காதலித்து நிச்சயதார்த்தம் செய்யத் தயாராக இருந்தனர். அந்த சமயத்தில் சித்தார்த் ஒரு விந்தணு தானம் செய்தவர் என்பதை நிருபமா கண்டுபிடிக்கிறார்.
என்னவென்று நிருபமா விவரம் கேட்கும் வாக்குவாதத்தின்முடிவில் ரவிமோகன் குழந்தை வேண்டாம், திருமணம் மட்டும் செய்து கொள்வோம் என்று சொல்ல குழப்பமடைந்த நிருபமா அவர்களுக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்துகிறார். இதனால் மனமுடைந்த சித்தார்த் பெரும் மன உளைச்சலில் தவித்து வருகிறார்.
நான்கு ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும் கட்டிடக் கலைஞர் ஸ்ரேயா (நித்யா மேனன்) மற்றும் கரண் (ஜான் கொக்கன்) ஆகியோர் வாழ்க்கையின் அடுத்த கட்டமாக திருமணம் செய்ய இருவரும் முடிவெடுக்கின்றனர். பின் விசா நோக்கங்களுக்காக தங்கள் குடும்பத்திற்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். நித்யாமேனனுக்கு ஜான் கொக்கன் தவறானவன் என தெரியவர அவனை விட்டு விலகுகிறார்.ஜான் கொக்கனால் ஏமாற்றப்ட்ட நித்யா மேனன் ஆண்களை வெறுத்து குழந்தையை பெற்றுக் கொள்ள கணவன் தேவையில்லை என்றும் ஃபெர்டிலிட்டி சென்டரில் முன் பின் தெரியாத டோனர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார். தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக டெஸ்ட்டியூப் பேபி (ரவி மோகன் விந்தணு) மூலம் கர்ப்பிணியாகிறாள். தனது கருவின் உண்மையான ஸ்பார்ம் டோனர் யார் என்று கண்டு பிடிக்க விலாசம் தேடி செல்லும்போது அந்த விலாசம் போலி என தெரியவர இந்த சூழ்நிலையில் ரவிமோகனிடம் நண்பராக பழகுகிறார். தான் தேடிக்கொண்டிருக்கும் ஸ்பார்ம் டோனர் ரவிமோகன்தான் என்று தெரியாமல். பிறகு இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ரவிக்கு குழந்தைகள் பிடிக்காது என்று தெரிந்தவுடன் அன்றே பிரிகிறார் நித்யா மேனன். சென்னை வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார் நித்யா மேனன். எட்டு வருடங்கள் ஆனநிலையில் ரவி பேங்களுரிலிருந்து சென்னைக்கு வருகிறார். நித்யா மேனனை சந்திக்கும் ரவி மீண்டும் பழக ஆரம்பிக்கிறார்கள் இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் சுவாராஸ்யமான கதை
ரவி மோகன் காதல், லூட்டி, சோகம், இரண்டு பெண்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது என நன்றாக நடித்திருக்கிறார்.நித்யா மேனன், குழந்தை பெற்றுக் கொள்ள துடிப்பது, பெற்றோர்களிடம் சண்டை போடுவது, ரவி மீது காதல் கொள்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யோகிபாபு,வினய்,வினோதினி, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன் டிஜே பானு என இதில் நடித்த அனைவருமே அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.ஏ.ஆர். ரஹ்மானின் இசைதான் இந்த படத்திற்கு முழு பலம் என்று சொல்லலாம். “என்னை இழு இழு இழுக்குதடி” மற்றும் “லாவண்டர் பெண்ணே” பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. கேவ்மிக் யூ ஆரியின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம்.
திருமணமாகாத ஒரு பெண் சமூக விதிமுறைகளை உடைத்து, விந்தணு நன்கொடையாளர் மூலம் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்தால் என்ன தவறு என்ற நோக்கத்தில் சொல்லியிருப்பதோடு சமூகத்தில் உள்ள வழக்கத்திற்கு மாறான காதல், உறவுமுறைகளையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. இரண்டாம் பாதியை ரசிக்க வைத்தவர் முதல் பாதியை இன்னும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.