தீயவர் குலை ந​டுங்க சினிமா விமர்சனம் :

எழுத்தாளர் ஜெபா (லோகு) மன உளைச்சலுடன் காரில் பயணிக்கும் போது வழியில் விபத்தில் சிக்குகிறார். அப்போது முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர் அவரை கொலை செய்கிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் அதிகாரி மகுடபதி (அர்ஜூன்) விசாரிக்கக் களமிறங்குகிறார். அவரது விசாரணையின் போது எழுத்தாளர் ஜெபா கொலையாவதற்கு முன் ‘காவேரி கரை’ என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பது, அதன் பின்பக்க அட்டையில் ஒரு அபார்ட்மெண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பது காண்கிறார். அந்த அபார்ட்மெண்ட் ஜெபாவின் நண்பர் கட்டுமான தொழிலதிபர் வரதராஜனுக்கு (ராம்குமார் கணேசன்) தொடர்புடையது என்பதை அறிந்து, மகுடபதி அந்த அபார்ட்மெண்ட்டிற்கு சென்று அவரிடம் தன் விசாரணை தொடங்குகிறார். அதை தொடர்ந்து தொழிலதிபரான வரதராஜன் அதே மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். பிறகு அந்த அபார்ட்மெண்ட்டில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கிறது.

அதை தொடர்ந்து தன் விசாரணையை தீவிரப்படுத்தும் போது, அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு சம்பவத்துக்கும் இந்த கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பதுடன், மகுடபதியின் பார்வை மீரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) பக்கம் திரும்புகிறது. மகுடபதியின் தீவிர விசாரணையில் மீரா தான் அந்த முகமூடி கொலையாளி என்பதை ஊர்ஜிதம் செய்கிறார். அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த அந்த சம்பவம் என்ன? எழுத்தாளர் ஜெபாஜின் ‘காவேரி கரை’ புத்தகத்தில் என்ன எழுதியிருந்தது? மீரா யார்? மீராவுக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு? போலீஸ் அதிகாரி மகுடபதி எப்படி கொலையாளி மீராவை கண்டுபிடித்தார்? இறுதியில் அவர் மீராவை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் அதிகாரி மகுடபதி கதாபாத்திரத்தில் கம்பீரமான உடலமைப்புடன் கச்சிதமாக பொருந்தி, நடிப்பு, ஆக்சன் என அனைத்திலும் அலட்டல் இல்லாமல் மிரட்டியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முக்கிய சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில், வழக்கமான எதார்த்தமான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.

அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, ராம்குமார், லோகு, ஆட்டிசம் பாதித்த சிறுமியாக குழந்தை அனிகா, வேல ராமமூர்த்தி, தங்கதுரை, ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், பத்மன் உட்பட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு செய்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசை மற்றும் பின்னணி இசை ஆகியோரின் பங்களிப்பு விறுவிறுப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

தொடர் கொலை, தீவிர இன்வெஸ்டிகேஷன், மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து, விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கிறார் தினேஷ் லட்சுமணன்.

 

மொத்தத்தில் ஜி.அருள்குமார் தயாரித்திருக்கும் தீயவர் குலை நடுங்க மிரட்டலான தீவிர இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர்.

#Theeyavar Kulai Nadunga movie review
Comments (0)
Add Comment