நடிகர்கள்: நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,
மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,
இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,
ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,
இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்.
நெல்லை மாவட்டத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள ஒரு மலை அடிவார கிராமத்தில் வசிப்பவர் அங்கம்மாள். இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பேத்தியுடன் அந்த கிராமத்துக்கே உரிய அதிகார தோரணை… ரவிக்கை அணியாத மிடுக்கான பேச்சு வாயிலே சுருட்டு என்று வாழும் நடுத்தர கிராமத்து பெண்மணி. இந்த அங்கம்மாளுக்கு மூத்த மகன் சுடலை படிப்பறிவு இல்லாததால் விவசாய பணிகளை கவனித்து வருகிறான், இளைய மகன் பவளம் நகரில் மருத்துவம் முடித்து டாக்டராக இருக்கிறார், மூத்த மகன் சுடலைக்கு ஒரு பெண் பிள்ளை தன் பேத்தியுடன் அங்கம்மாள் இணக்கமாக பழகுகிறாள். அங்கம்மாள் தன் சுயமரியாதையை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காமல் குடும்பத்தை கட்டுக்கோப்பாக காத்து வருகிறாள்.
இந்த நிலையில் மருத்துவம் முடித்து கிராமத்துக்கு திரும்பும் இளைய மகன் பவளம் தன் காதலி ஜாஸ்மின் மற்றும் அவரது குடும்பத்தாரை தனது தாயிடம் அறிமுகப்படுத்த நினைக்கிறார்.
பவளம் தன் அண்ணன் சுடலை தன் அண்ணி ஆகியோர் ஜாஸ்மின் குடும்பத்தை தன் தாயிடம் அறிமுக ப்படுத்துவதற்கு முன் அங்கம்மாளுக்கு ரவிக்கை அணிவித்து நல்லபடியாக பேச கற்றுக் கொடுத்து அங்கம்மாளின் நடவடிக்கைகளை மாற்ற முயற்சிக்கிறார்கள் ஆனால் அங்கம்மாள் அதற்கு என்ன எதிர்வினை என்பதுதான் படத்தின் மீதி கதை.
கீதா கைலாசம் குடும்பம், பாசம், அதிகாரம், கோபம், பிடிவாதம், மனசுக்குள் தவிப்பு, என அனைத்தையும் நேர்த்தியான உடல் மொழி மூலம் கச்சிதமாக வெளிப்படுத்தி நெல்லை தமிழ் பேசி ரவிக்கை அணியாத அங்கம்மாள் கதாபாத்திரத்தை நங்கூரமிட்டு நிறுத்தியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு ஒரு பெரும் அடையாளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. நிச்சயம் பல விருதுகள் அவருக்கு கிடைக்கும்.
அங்கம்மாளின் மகன்களாக பரணி, சரண் சக்தி, மருமகளாக தென்றல் மூவரும் தங்கள் நடிப்புத் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி குடும்ப இயக்கங்களுக்கு அடுக்குகளை சேர்க்கின்றனர்.
முகம்மது மக்பூல் மன்சூர் இசை மற்றும் பின்னணி இசை, அஞ்சாய் சாமுவேலின் ஒளிப்பதிவும், பிரதீப் சங்கர் எடிட்டிங், கோபி கருணாநிதி அரங்குகள், என அனைவரும் தொழில்நுட்ப ரீதியாக நெல்லை சீமை அழகிய வாழ்வியலோடு நம்மை ஒன்ற வைத்துள்ளனர்.
பெருமாள் முருகனின் சிறுகதையான கோடித்துணியின் தழுவல் அங்கம்மாள், வளைந்து கொடுக்க மறுக்கும் ஒரு சக்திவாய்ந்த பெண்ணைப் பற்றிய மென்மையான, வசீகரிக்கும் எளிய வாழ்க்கையை அழகாக திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் விபின் ராதாகிருஷ்ணன்.
மொத்தத்தில் ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் இணைந்து தயாரித்துள்ள அங்கம்மாள் இன்றும் ஒரு சில கிராமங்களில் ரவிக்கை அணியாத ஒரு சில பெண்களின் வெள்ளந்தியான பேச்சும் வாழ்க்கையையும் எடுத்துச் செல்லும் படைப்பு.