மாய பிம்பம் திரைவிமர்சனம்

காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும் ஒரு அருமையான திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் கே. ஜே. சுரேந்தர்,செல்ஃப்ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ்.இதில் ஜானகி, ஆகாஷ், ஹரிருத்ரன், ராஜேஷ், அருண்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு: எட்வின் சகாய், இசை: நந்தா, படத்தொகுப்பு: வினோத் சிவகுமார், கலை: மார்ட்டின் , பாடல்கள்: விவேகா, பத்மாவதி ,நடனம்: கிரிஷ், புகைப்படம்: எட்வின் சகாய், ஓலி: ஷான்சவன், மக்கள் தொடர்பு: AIM.

 

கடலூர் சிறைச்சாலையில் கைதியாக மருத்துவ கல்லூரி மாணவன் ஜீவா.ஒரு சிறை அதிகாரியை காப்பாற்ற எடுக்கும் முயற்சி மற்றவர்களால் தவறாக பார்க்கப்பட்டு சித்ரவதை அனுபவிக்க அவனுடைய செய்கையை சிறை மருத்துவர் சுட்டிக்காட்டி தடுத்து அவனுக்கு சிகிச்சை செய்து காப்பாற்றுகிறார். இத்தகைய நல்ல இளைஞன் ஏன் சிறைவாசத்தை அனுபவிக்கிறான் என்பதற்கான காரணத்துடன் 2005 ஆம் ஆண்டு கதைக்களம் தொடங்குகிறது. ஜீவாவிற்கு தந்தை, தாய், அண்ணன், அண்ணி அவர்களுடைய மகள் என்று அன்பான அழகான கூட்டுக் குடும்பம்.ஜீவாவிற்கு கேபிள் டிவி பழுது பார்க்கும் நண்பன் மோகன், ரமேஷ், முரளி என்று மூன்று உயிர் நண்பர்கள். மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருக்கும் ஜீவா விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் பொழுதை கழிக்கும் பழக்கமுள்ளவன். அதிலும் மோகன் பெண்​ பித்தன், பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது, அவர்களை அணுகி பழகுவது என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு மற்றவர்களை வெறுப்பு ஏற்றுவதில் கில்லாடி. இவனின் சபல புத்தியுடன் கூடிய சகஜமான பழக்கவழங்கங்கள் நண்பர்களின் மனதில் பெரியளவில் பெண்களைப் பற்றிய தவறான எண்ணத்தை விதைக்கிறது. இந்நிலையில் ஜீவா பேருந்தில் செல்லும் போது எதிரே பக்கத்து பேருந்தில் பயணம் செய்யும் சுமதியை (ஜானகி) பார்த்தவுடன் ஈர்க்கப்படுகிறார். அவளை பின் தொடர்ந்து செல்லும் போது விபத்து ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கே சுமதி நர்ஸாக வேலை செய்ய, ஜீவாவிடம் பழகும் வாய்ப்பு அமைந்து, நண்பர்கள் உசுப்பேத்த, உடல் தேறியவுடன் இருவரும் சந்திக்கின்றனர். மோகனின் யோசனைப்படி ஜீவா சுமதியை கோயிலுக்கு செல்லலாம் என்று கூறி நண்பனின் அறைக்கு ஏமாற்றி அழைத்துச் செல்கிறான். அங்கே தவறாக நடக்க முயற்சி செய்யும் ஜீவாவை உதறி தள்ளிவிட்டு அழுகையுடன் வெளியேறுகிறார் சுமதி. அதன் பின் இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு குறைய, தன் தவறை உணர்ந்து மனம் வருத்தும் ஜீவா சுமதியை தேடிச் செல்ல, மருத்துவமனைக்கு சுமதி வருவது இல்லை என்ற தகவல் கிடைக்கிறது. சுமதியை தேடி அலையும் ஜீவாவால் அவரை கண்டுபிடிக்க முடிந்ததா? சுமதி வேலைக்கு வராததற்கான காரணம் என்ன? சுமதிக்கு என்ன நடந்தது? ஜீவா சுமதியை எந்த அதிர்ச்சியான நிலையில் பார்த்தார்? ஜீவா சிறை தண்டனை அனுபவிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் பதற வைக்கும் க்ளைமேக்ஸ்.

நாயகன் ஆகாஷ் பிரபு மருத்துவ மாணவன் ஜீவாவாக நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். தந்தையின் பாசம், தாயின் பரிவு, அண்ணனின் தோழமை, அண்ணியிடம் மரியாதை, குழந்தையுடன் அன்பு என்று குடும்பத்தினர்களை மதிக்கும் பண்பு, பின்னர் நண்பனின் தவறான வழிகாட்டுதல் காதலை காமமாக நினைத்து அணுக, அதுவே எதிர்வினையாகி அவனுடைய வாழ்க்கை தடம் புரள அதனால் காதலியின் துன்பத்தை போக்க எடுக்கும் விபரீத செயலால் ஏற்படும் சிறைவாசம் என்று அனைத்து காட்சிகளிலும் அழுத்தத்துடன் உணர்ச்சி பொங்க நடித்துள்ளார்.காதலி சுமதியாக ஜானகி எளிமையான முகம், கவிதை பேசும் அழகான கண்கள், யதார்த்தமான புன்சிரிப்புடன் அனைத்தையும் கையாளும் விதம், தாயின் நடத்தையால் தன்னை தவறாக பார்க்கும் ஆண்களிடமிருந்து விலகி செல்ல எடுக்கும் முயற்சிகள், தன்னை நேசிக்க காதலன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் திளைக்கும் நேரத்தில் நடக்கும் சம்பவம் எத்தகைய தாக்கத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தி மன உளைச்சலை உண்டாக்குகிறது, அதிலிருந்து மீண்டு வர நினைக்கும் நேரத்தில் நடக்கும் அசம்பாவிதம் க்ளைமேக்ஸ் காட்சியில் தத்ரூபமான நடிப்பில் கண் கலங்க செய்து விடுகிறார்.

இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத் சிவகுமார், கலை இயக்குனர் மார்ட்டின், பாடல்கள் விவேகா – பத்மாவதி, நடன இயக்குனர் கிரிஷ், புகைப்பட கலைஞர் எட்வின் சகாய், ஓலி ஷான்சவன் ஆகியோர் 2005 ஆம் காலகட்டத்தில் நடக்கும் காதல் கதைக்கேற்ற பங்களிப்பை கொடுத்திருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் அளப்பரிய பணி கவனிக்க வைத்து அசத்தியுள்ளது.

நடுத்தர குடும்பத்தில் நடக்கும் காதல் கதையை 2005ஆம் ஆண்டிற்கேற்ற காட்சிகளுடன் திரைக்கதையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஜே.சுரேந்தர். முதல் பாதியில் சிறையில் இருக்கும் இளைஞனின் நினைவலைகளில் தொடங்கும் படம் குடும்பம், நட்பு, காதல் என்ற கலகலப்புடன் செல்ல, இரண்டாம் பாதி நண்பர்களின் மேலோட்டமான கண்ணோட்டங்கள், காமம் மற்றும் காதலை வேறுபடுத்தி காட்டி உணர்வுகளின் வெளிப்பாட்டை அழுத்தமான காட்சிகளுடன் மனதை தொடும் அளவிற்கு கொடுத்து தடம் பதித்துள்ளார் இயக்குனர் கே.ஜே.சுரேந்தர். முதலில் ஆணின் பார்வையில் பெண்களைப் பற்றிய எண்ணத்துடன் கதை நகர, இரண்டாம் பாதியில் பெண்ணின் பார்வையில் கதை நகரும் போது யதார்த்தமான உண்மையினை புரிந்து கொள்ளும் விதத்தில் காட்சிப்படுத்திருக்கும் விதம் அருமை. அனைவருமே புது முகங்கள், நேர்த்தியான நடிப்புடன் வித்தியாசமான கதைக்களத்தை புதிய கோணத்துடன் அனைவரும் உணரும் வண்ணம் உணர்ச்சிகளின் குவியல்களாக பதற வைத்து கொடுத்து அசத்தியுள்;ளார் கே.ஜே.சுரேந்தர்.

காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும் ஒரு அருமையான திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தை எழுதியக்கிய கே ஜே சுரேந்தருக்கு மனமார வாழ்த்துக்கள்,மொத்தத்தில் அருமையான ஒரு காதல் காவியம்,தியேட்டரில் பார்க்கவும்.

ரேட்டிங் 3/5

Henry G

 

 

#mayabibum movie review
Comments (0)
Add Comment