திரெளபதி 2’ விமர்சனம்

திரெளபதி 2″ மோகன்.ஜி இயக்கத்தில் நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் – சோழ சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜிப்ரான். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசூடன், நட்டி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, வேல ராமமூர்த்தி, சரவண சுப்பையா, பரணி, தேவயானி சர்மா, திவி, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக்குழு:-
தயாரிப்பு : நேதாஜி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : மோகன் ஜி
ஒளிப்பதிவு : பிலிம் கே சுந்தர்
இசை : ஜிப்ரான்
கலை இயக்குனர் : எஸ்.கமல்
படத்தொகுப்பு : தேவராஜ்
சண்டை பயிற்சி : ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: டிஒன், சுரேஷ் சந்திரா, ஏ.அப்துல் நாசர்.

நிகழ்காலத்தில் விழுப்புரம் அருகே ரிச்சர்ட் ரிஷி தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது சில இந்துக்கள் தங்கள் மூதாதையர் நிலம் இப்போது வக்பு வாரியத்தின் கீழ் வந்துவிட்டது என்பதையும், அதன் மீது தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, தங்களுடைய இந்த சொத்தை விற்க வேண்டும் என்றால் அவர்கள் வக்பு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பதையும் அறிந்து கொள்கிறார்கள். ஊர் மக்களை ஒன்று திரட்டி, வக்ஃப் சொத்தாக உரிமை கோரப்பட்ட ஒரு பழங்காலக் கோயில் உடன் கூடிய பரந்த நிலப்பரப்பு பற்றிய போராட்டம் குறித்த செய்தி உலகம் முழுவதும் பரவுகிறது. செய்தி அறிந்து, அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒரு வசதியான வெளிநாடு வாழ் தமிழர் நிதியுதவி செய்து, கோயில் புனரமைப்பு பணிகளை மேற்பார்வையிட தனது மகள்களான ரக்ஷனா அவளது தங்கையை அனுப்புகிறார். அவர்களுக்கு ரிச்சர்ட் ரிஷி அந்த கோவிலுக்கு செல்ல வழி காட்ட அருகில் செல்லும் போது ரக்ஷனா உடம்பில் அமானுஷ்ய சக்தி ஊடுருவி வினோதமாக நடந்து கொள்கிறார். அவள் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுல்தான் ஆட்சிக்கு எதிராக தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க வீர சிம்ம கடவராயனின் (ரிச்சர்ட் ரிஷி) கதையைக் விவரிக்கத் தொடங்குகிறாள். வீர சிம்ம கடவராயன் (ரிச்சர்ட் ரிஷி) ஹோய்சாலப் பேரரசர் வீர வல்லாள மகாராஜாவின் (நட்டி) கருட படையில் இணைந்து பணியாற்றுகிறார். அதே நேரத்தில் மதுரை சுல்தான் (தினேஷ் லம்பா) மற்றும் டெல்லியின் துக்ளக் (சிராக் ஜானி) ஆகிய இருவரையும் எதிர்த்து போராடுகிறார். சுல்தானிய ஆட்சியாளர்கள் காட்டு மிராண்டித்தனமான, பெண்களை இச்சைக்கு பயன்படுத்துபவர்களாகவும், நாடு முழுவதும் உள்ள இந்துக்களை, இஸ்லாமியத்துக்கு மதம் மாற வற்புறுத்தி கொடுமை செய்து வருகின்றனர். மதம் மாற வைக்கிறார்கள், மறுப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை எதிர்த்து போரிடும் வல்லாள மகாராஜா சுழ்ச்சியால் கொலை செய்யப்படுகிறார். மகாராஜாவையும், கருட படை வீரர்களையும் காப்பாற்ற முடியாத வேதனையில் வீரசிம்ம காடவராயர், தன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்படும் போது, வல்லாள மகாராஜா அவர் முன் தோன்றி முக்கியமான பொறுப்பு ஒன்றை காடவராயனுக்கு கொடுக்கிறார். மகாராஜாவின் உத்தரவை நிறைவேற்றும் முயற்சியில் வீரசிம்ம காடவராயர் ஹோய்சாள மன்னனை நோக்கி செல்லும் போது, அவரது மனைவி திரௌபதி தேவி (ரக்ஷனா இந்துசூடன்) ஒரு சூழ்ச்சிக்கார அரசவை அதிகாரியின் சதிவலையில் சிக்கி, தன் கணவர் வீரசிம்மரை தவறாக நினைத்து அவள் தன் தாலியை அகற்றுகிறாள். சூழ்ச்சிக்கார அரசவை அதிகாரி செய்த சதிவேலை என்ன? இந்த சதி வலையில் சிக்கிய திரௌபதி தேவி என்ன ஆனார்? வல்லாள மகாராஜா காடவராயனுக்கு கொடுத்த அந்த முக்கியமான வேலை என்ன? போன்ற கேள்விகளுக்கு மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளுடன், பதில் அளிக்கிறது ‘திரௌபதி 2’.

வீரசிம்ம காடவராயனாக ரிச்சர்ட் ரிஷி தனது கதாபாத்திரத்தின் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து கதாபாத்திரத்தோடு முழுமையாக ஒன்றிணைந்து சண்டை, ராஜ விசுவாசம், எதிரிகளை புத்திசாலிதனமாக அணுகும் முறை, வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி உள்ளார்.

ரக்ஷனா, வீரமிக்க பெண் மற்றும் விசுவாசமான மனைவியிலிருந்து கணவன் மீது கோபமான குற்றம் சாட்டுபவராக மாறும் திரௌபதி தேவி கதாபாத்திரத்திற்கு தீவிரம் சேர்க்கிறார். எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டுக்குறியது.அமைதியான அதிகாரத்துடன் வீர வல்லாள மகாராஜாவாக தன்னை வெளிப்படுத்திய நட்டி நட்ராஜ், முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் சிராக் ஜானி, மதுரை சுல்தான் கியாசுதீன் தம்கானி கதாபாத்திரத்தில் தினேஷ் லம்பா, முகமது பின் துக்ளக்கின் மனைவி கதாபாத்திரத்தில் தேவயானி சர்மா, சம்புவராயர் கதாபாத்திரத்தில் வேல ராமூர்த்தி, பூசாரி கதாபாத்திரத்தில் தர்மராஜ் மாணிக்கம், பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருனோதயன் லக்ஷ்மணன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் வரலாற்று கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.14 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த வல்லாள மகாராஜா கதையை மையமாக வைத்து சுல்தானிய ஆட்சியில் இந்து, இஸ்லாம் மதத்திற்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக வைத்து, சர்ச்சைகளை கடந்து எதார்த்தமான வாழ்வியலை திரையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மோகன்.ஜி

திரௌபதி 2 அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான ஒரு வரலாற்று காவியம்

ரேட்டிங்:3.5/5

 

#draupadi 2 movie review
Comments (0)
Add Comment