இதுவரை சிம்புவை யாரும் கண்டிராத கிராமத்து இளைஞனாக உடல்மொழியை மாற்றி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிம்பு. ஒரு கிராமத்து இளைஞன் நகர்ப்புறத்தில் வசித்தாலும் காதலியைச் சந்தித்து தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக அதாவது தனது உண்மையான வயதைக் குறிப்பிட்டு பேசுவதும், சட்டையை வைத்து முகத்தை துடைத்தும் ஒரு கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். மீசைகூட இல்லாமல் அச்சுஅசலான் தென்மாவட்ட இளைஞராக வருவது முதல் படிப்படியாவ வளர்ந்து ஒரு பெரும் ஆளுமையாக உருவெடுப்பது வரைஒவ்வொரு காட்சியிலும ஆச்சரியப்படுத்துகிறார் சிம்பு.
கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவு. அவரது கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பாக இருக்கிறது. தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து சிறப்பு செய்து இருக்கிறார்.
ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், வில்லன்களாக நடித்திருக்கும் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், கதைக்கு ஏற்றபடி இருக்கிறது. பாடல்கள் அனைத்திலும் பழைய பாடல்களின் பாதிப்பு இருக்கிறது.
சித்தார்தாவின் ஒளிப்பதிவு மும்பையின் இருண்ட உலகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் இயல்பாக இருப்பதற்காக கேமராவை கையில் வைத்து எடுத்திருப்பது வியக்க வைக்கிறது.
ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை வசனத்தை கெளதம் மேனனும் சேர்ந்து எழுதியிருக்கிறார். இயக்குநர் கெளதம் மேனனின் பாணி தனியாக தெரிந்தாலும், ஜெயமோகனின் எதார்த்தமும் இணைந்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது.
ஒரு வாழ்க்கைப் பயணம் நீரோடைபோல் ஓடும் இந்தப்படத்துக்கு சிம்புவின் நடிப்பும் துடிப்பும் இருப்பதால் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.