‘ராயர் பரம்பரை’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் மிகவும் செல்லமாக வளர்த்த தங்கையான கஸ்தூரி காதலித்து வீட்டை விட்டு காதலனுடன் ஒடிப் போய் விடுகிறார்.  இதனால் ஆனந்தராஜுக்கு காதல் என்றாலே பிடிக்காது. இவருக்கு காதல் மீது மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டதால்,  இந்த ஊரில் யாரும் காதலிக்கக் கூடாது. அப்படி யார் காதலித்தாலும் உடனே தடுத்து விடுவார்.  இதற்காக ஒரு தனிப்படையை அமைத்து, அந்த தனிப்படையின் தலைவனாக  மொட்டை ராஜேந்திரன் செயல்படுகிறார். இந்த சூழ்நிலையில் அந்த ஊருக்கு புதிதாக வரும் கதாநாயகன் கிருஷ்ணாவை கதாநாயகிகள் கிருத்திகா சிங் மற்றும் அனுஷா தவான் இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய காதலை கிருஷ்ணா ஏற்க மறுக்கிறார். கிருஷ்ணா அவர்களை நண்பர்களாக பார்க்கிறேன் என்று சொல்லி தவிர்த்து விடுகிறார். இந்நிலையில், தனது மகள் சரண்யாவை கிருஷ்ணா காதலிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய ராயர் முடிவு செய்கிறார். தன்னுடன் இருக்கும்  அடியாட்களை அழைத்து கிருஷ்ணாவை கொல்வதற்கு அனுப்புகிறார். கிருஷ்ணா அதில் இருந்து தப்பித்தாரா? ராயரின் ஊருக்கு கிருஷ்ணா வந்ததன் காரணம் என்ன? என்பதை காமெடியாக இயக்குநர் ராமநாத்.டி. இயக்கி இருக்கும்  படம்தான் ‘ராயர் பரம்பரை’ 

கதாநாயகன் கிருஷ்ணா ஆக்சன்  படங்களில் நடித்து வந்தாலும், முதல் முறையாக காமெடி கதாபாத்திரத்தில் மிக  சிறப்பாகவே  நடித்திருக்கிறார். மிக ஜாலியான கதாபாத்திரத்தில் ஜாலியாகவே நடித்து, அவருக்கு கொடுத்த பங்களிப்பை மிக அற்புதமாக செய்திருக்கிறார்.துறு துறு இளைஞனாக காதல் காட்சிகளிலும் காமெடி காட்சிகளிலும்  நடிப்பில் அனைத்து  ரசிகர்களையும் கவருகின்ற மாதிரி அசத்தியிருக்கிறார்.

அறிமுக நாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கிடைத்த ஒரு அழகு தேவதை என்றே சொல்லலாம். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக அழகாக நடித்து இருக்கிறார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புக்கள் கண்டிப்பாக வரும்.

ஆனந்தராஜ் ராயராக ஒரு வில்லத்தனமான தந்தையாக காமெடி கலந்த முறையில், தனது அனுபவ நடிப்பால் அசத்தி இருக்கிறார். மற்றும் கே ஆர் விஜயா , மொட்டை ராஜேந்திரன், கிருத்திகா சிங், அனுஷா தவான், மனோபாலா, RNR மனோகர், பவர் ஸ்டார் சீனிவாசன், கஸ்தூரி, படத்தின் தயாரிப்பாளர் சின்னசாமி மௌனகுரு, பழைய ஜோக் தங்கதுரை, கல்லூரி வினோத், பாவா லக்ஷ்மணன், சேஷு என நடித்த நடிகர்கள் அனைவருமே நடிப்பில் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் .

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, இயற்கை எழில் கொஞ்சும் லொக்கேஷன்களை கண்டுபிடித்து நம் கண்களுக்கு குளிச்சியூட்டி காட்சிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் குறைவில்லை.

இயக்குனர் ராம்நாத் இயக்கி இருக்கும் முதல் படம் என்பதால் கதை, திரைக்கதை வசனங்களில் காமெடி கலந்து இருந்தாலும், அதில், ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்ட் கலந்து சொல்லி இருப்பதை பாராட்டலாம். இருந்தாலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் மிக சிறந்த படமாக வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  காமெடி ரசிகர்களுக்காக சிறந்த முறையில், ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து மகிழும் காமெடி கலாட்டாவாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்நாத்.

மொத்தத்தில், ‘ராயர் பரம்பரை’ காமெடி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படம்.

திரைநீதி செல்வம்.

"RAYAR PARAMBARAI" MOVIE REVIEWFeatured
Comments (0)
Add Comment