‘அங்காரகன்’ விமர்சனம்

89

நடிகர்கள் : ஸ்ரீபதி, சத்யரஜ், நியா, அங்காடி தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத்
இசை : கு.கார்த்திக்
ஒளிப்பதிவு : மோகன் டச்சு
இயக்கம் : மோகன் டச்சு
தயாரிப்பு : ஸ்ரீபதி

குறிச்சி மலை வனப்பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பலர் தங்குகிறார்கள். அங்கிருக்கும் ராணி பங்களா பல வருடங்களாக திறக்கப்படாமல் இருக்க, அங்கு வரும் புது மேனேஜர் அந்த பங்களாவை திறந்து அங்கு விருந்து ஒன்றை நடத்துகிறார். ரிசார்ட்டில் உள்ளவர்கள் அனைவரும் அந்த விருந்தில் பங்கேற்க, திடீரென்று இரண்டு பெண்கள் மாயமாகிவிட, அதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி சத்யராஜ், அங்கிருப்பவர்களிடம் விசாரணை நடத்தும் போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருவதோடு, இறுதியில் அங்கு நடக்கும் அனைத்துக்கும் அங்காரகன் தான் காரணம் என்பதும் தெரிய வருகிறது. யார் அந்த அங்காரகன்?, யாரும் அழைக்காமல் ரிசார்ட்டுக்கு திடீரென்று வந்த போலீஸ் அதிகாரியான சத்யாராஜின் உண்மையான முகம் என்ன? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீபதி புதுமுகம் என்றாலும் நடிப்பு, ஆட்டம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் அளவுக்கு இருக்கிறார். எந்த நேரமும் சரக்கு கையுமாக இருக்கும் அவர், சரக்கை தேடி அலையும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் நியாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் என்றாலும் அதில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், மொட்டை தலையுடன் மீண்டும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால், அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு காட்சிகளில் அழுத்தம் இல்லாதது ஏமாற்றம். ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக விசாரணை நடத்தும் சத்யராஜ், திடீரென்று அவதாரம் எடுப்பது கவனம் பெற்றாலும், அதை சரியான முறையில் சொல்லாமல் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

கருந்தேள் ராஜேஷின் கதைக்கு நாயகன் ஸ்ரீபதி திரைக்கதை எழுத, மோகன் டச்சு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை திகிலோடு சொன்னதோடு, முழுக்க முழுக்க கமர்ஷியலாக கொடுக்க இயக்குநர் முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி சில இடங்களில் தோல்வியடைந்திருந்தாலும், பல இடங்களில் வெற்றியடைந்துள்ளது.

குறிப்பாக சத்யராஜின் கதாபாத்திரத்தை யூகிக்க முடியாதபடி வடிவமைத்திருக்கும் இயக்குநர் மோகன் டச்சு, ராணி பங்களாவின் பின்னணியையும், அங்காரகனின் பின்னணியையும் இன்னும் கூட அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இருந்தாலும், திகில், திரில்லர், சஸ்பென்ஸ் என அனைத்து அம்சங்களையும் அளவாக பயன்படுத்தி, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்ததில் மொத்த படக்குழுவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

ரேட்டிங் 3/5