Take a fresh look at your lifestyle.

வெற்றி நடை போடும் பைசன் காலமாடான் சினிமா விமர்சனம்

வெற்றியின் பார்முலா ஸ்போர்ட்ஸ் கதைகள்.

12

வெற்றியின் பார்முலா ஸ்போர்ட்ஸ் கதைகள். அந்த வகையில் விடாமுயற்சியில் ஏற்றத்தாழ்வுகளில் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி போராடி வெற்றி பெறும் ஒரு இளைஞனின் கதையை ஆழமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தில் துருவ் விக்ரம் கிட்டன் வேடத்தில் அசத்தியிருக்கிறார், அவருடைய தந்தை வேடத்தில் வேலுச்சாமியாக பசுபதியும், சாதி தலைவர்களாக அமீர் (பாண்டியராஜன்) நடிகர் லால் கந்தசாமி கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள், மேலும் ராணியாக அனுபமா பரமேஸ்வரன், காண்டீபனாக அழகப் பெருமாள், சாந்தன் ராஜ் இடத்தில் அருவி மாதவன் ,விஸ்கே சிங்கமாக அனுராக் அரோரா ,தரனாக விஷ்வ தேவ் ரட்சகொண்டா ,ஆகியோர் அருமையாக நடித்துள்ளார்கள்..

1994 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும் 12 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி குழுவில் இடம் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிட்டான்(துருவ்) அனைத்து ஆட்டங்களிலும் விளையாட விடாமல் புறக்கணிக்கப்பட்டு வெளியே பார்வையாளர் போல் அமர வைத்திருப்பது போல் கதைக்களம் தொடங்குகிறது. இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாட வேண்டிய சூழ்நிலையில் பலம் பொருந்திய வீரர்களை தேர்ந்தெடுக்கப்படும் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி அணியின் தலைவர் தன்னுடைய மேலதிகாரிகளிடம் கிட்டானுக்காக பரிந்துரை செய்தும் நிராகரிக்கப்படுகிறார். இந்த சூழ்நிலையில் மனத்தி கிராமத்தில் கிட்டானின் ஆட்டத்தை காண ஆவலோடு காத்திருப்பதும், ஜப்பானில் கிட்டான் தான் கடந்த வந்த பாதையை நினைத்து வேதனைப்பட்டு நினைத்து கண் கலங்குவது போல் ஃபிளாஷ்பேக் காட்சிகள் விரிவடைகிறது. திருச்செந்தூரில் மனத்தி கிராமத்தைச் சேர்ந்த கிட்டானின் தந்தை வேலுச்சாமி (பசுபதி) அக்கா ரஜிஷா விஜயனுடன் (ராஜி) வசிக்கிறார். கிட்டானுக்கு கபடி ஆட்டத்தில் நாட்டம் ஏற்பட்டு இந்திய அணியில் பங்கேற்று நல்ல கபடி ஆட்டக்காரராக வேண்டும் என்ற வெறியோடு பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்.அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக தீராத சாதி பகையால் கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முன்னோடிகளாக பாண்டியராஜா (அமீர்) மற்றும் கந்தசாமி (லால்) தலைமையில் இரண்டு தனித்தனி பிரிவுகளுக்கு இடையே மோதல்களும், கொலைகளும் அரங்கேற, சின்ன சச்சரவு கூட ஜாதி கலவரமாக உருமாறி மக்களை பயத்தில் வைத்திருக்கிறது. கிராமமே இரண்டு ஜாதி தலைவர்களின் சொல்படி ரெண்டுபட்டு கிடக்கிறது. தனது இளம் வயதில் சந்தித்த கசப்பான இந்த சம்பவங்களால் அச்சப்படும் கிட்டானின் தந்தை வேலுச்சாமி தன் மகனுக்கு கபடி எல்லாம் வேண்டாம் என்று கிட்டானின் உடற்பயிற்சி ஆசிரியர் சாந்தன்ராஜிடம் (அருவி மதன்) கண்டிப்புடன் சொல்லிவிடுகிறார். இருந்தாலும் சாந்தன்ராஜ் வேலுச்சாமியிடம் கிட்டானின் திறமையை எடுத்துச் சொல்லி சம்மதம் வாங்குகிறார். கிட்டானின் திறமையை வெளிப்படுத்த ஆசிரியர் சாந்தன்ராஜ் பல போட்டிகளில் விளையாட வைக்க, கிட்டானின் புகழ் பரவுகிறது. முதலில் தமிழ்நாடு அணியில் இடம்பெற்று மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்.

இந்நிலையில் கிராமத்தில் இரு சாதி தலைவர்களின் சண்டை ஒயாமல் பல கொலைகள் நடந்து கொண்டிருக்க, இங்கிருந்தால் மகனின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று நினைக்கும் வேலுச்சாமி கபடி பயிற்சிக்காக வெளியூர் அனுப்பி வைக்கிறார். அங்கே பயிற்சிகள் செய்து, இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்புகள் இருந்தும் அவரது பெயர் விடுபடுகிறது. இதனால் விரக்தியில் இருக்கும் கிட்டான் மீண்டும் தன் கிராமத்திற்கு வருகிறார். அதன் பின் கிராமத்தில் பாண்டியராஜா கொல்லப்பட ஊரில் பெரும் கலவரம்  வெடிக்கிறது. திடீரென்று தொலைபேசி மூலம் கிட்டான் இந்திய அணியில் இடம் பெற்ற தகவல் கிடைக்க, வேலுச்சாமி ஊர் மக்களின் கண்ணில்படாமல் கிட்டானை வெளியூருக்கு அனுப்பி வைத்தாரா? அவரால் முடிந்ததா? போலீஸ் இவர்களை என்ன செய்தது? பாண்டியராஜா கொலைக்கு கந்தசாமியை பழி வாங்கினார்களா? ஊரில் ஜாதி கலவரம் ஒழிந்ததா? கிட்டான் இந்திய அணியில் இடம்பெற்று ஒரங்கட்டப்பட்டாலும் விடாமுயற்சியால் சாதனைகள் செய்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

கிட்டானின் வெறித்தனமான உழைப்பு படத்தின் காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏற்றத்தாழ்வு ஜாதி வெறியாட்டத்தில் மாட்டி தவிக்கும் கிட்டான் துவண்டு விடாமல் வெறித்தனமாக ஓடி தன்னை ஆசுவாச ப்படுத்திக் கொள்கிறான்.எதற்காக இந்த கலவரங்கள்? அப்பாவி மக்கள் பலியாவதை நினைத்து வேதனைப்படும் இடங்களிலும், தேவையில்லாமல் சண்டையிட்டு, பழி வாங்க துடிக்கும் கிராமத்து மக்களை பார்த்து கோபமாவதும், தன் தந்தையை அவமானப்படுத்தியவர்களை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளிலும், தன் அக்காவின் உறுதுணையோடு கபடி விரராக களமிறங்குவதும், பின்னர் தன் தந்தையின் வழிகாட்டுதலின்படி கபடி வீரராக மிளிரும் இடங்களில் துருவ் விக்ரம் அசாத்திய வலிமையுடன் படத்தை தாங்கி பிடித்துள்ளார். தன் வாழ்க்கையில் தடைகற்கலாக இருந்ததை வெற்றி படிகட்டுகளாக மாற்றி முன்னேறும் இளைஞனின் விடாமுயற்சியின் மறுஉருவமாக இந்த படத்தில் வனத்தி கணேசனின் பயோபிக்கில் மிளிர்கிறார்.

கிட்டானின் தந்தை வேலுச்சாமியாக பசுபதி வாழ்ந்திருக்கிறார். ஒரு மகனின் வெற்றிக்கு பின்னால் ஒரு தந்தை இருப்பார் என்று மாற்றி எழுதும் அளவிற்கு கச்சிதமான பாசமுள்ள தந்தையாக, மகனின் மேல் இருக்கும் பாசத்தால், கபடி விளையாடுவதற்கு தடை சொல்வதும், பின்னர் மகனின் வெறித்தனமான ஆட்டத்தைப் பார்த்த பிறகு மனதை மாற்றிக்கு கொண்டு மகனுக்காக அனைத்து தியாகங்களையும் செய்து அவனின் முயற்சிக்கு உற்ற துணையாக இருந்து வழி நடத்தி செல்லும் குருவாக, மகனின் ஆட்டத்தை கண்டு பூரிப்படையும் நேரங்களிலும், ஆக்ரோஷ தெய்வ நடனத்திலும் மேம்பட்ட நடிப்பு படத்திற்கு பலம்.

ஜாதி தலைவர்களாக பாண்டியராஜாவாக அமீர் மற்றும் கந்தசாமியாக லால்  தங்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை நிறைவாக செய்து வில்லன்களாக இருவரும் படத்தின் காட்சிகயில் மிரட்டியுள்ளனர்.

கிட்டானின் சகோதரி ராஜியாக ராஜிஷா விஜயன் சகோதர பாசத்தை காட்டி தம்பியை கபடி விளையாட்டு வீரராக முன்னெடுத்துச் செல்லும் போதும், ஒவ்வொரு முறையும் தடங்கள் ஏற்படும் போது ஊக்கத்தை தந்து முன்னேற வைக்க படாதபாடு படுவதும், தன் தோழியே தம்பியை காதலிப்பதை அறிந்து அதிர்ச்சியாகி, பின்னர் ஏற்றுக் கொள்வது என்று முக்கியமாக கதாபாத்திரம் படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் பலம்.

ராணியாக அனுபமா பரமேஸ்வரன் அதிக வயதுடைய காதலியாக தைரியமான பெண்ணாக சில காட்சிகள் தான் என்றாலும் முக்கியத்துவம் இல்லாத காட்சிகளில் வந்து போகிறார்.

உடற்பயிற்சி ஆசிரியராக அருவி மதன் படத்தின் உயிர்நாடி. இவர்களுடன் அனுராக் அரோரா, விஸ்வதேவ் ரச்சகொண்டா ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.

ஒளிப்பதிவாளர் எழில் அரசு கே, நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசையும், சக்தி திருவின் எடிட்டிங் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதைக்களத்தை தங்களுடைய தொழில்நுட்ப திறமையால் ரத்தம் தெறிக்கும் கிராமத்து போராட்டங்களை தத்ரூபமாக அசத்தலுடன் கொடுத்துள்ளனர்.அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மனத்தி கணேசன் என்ற பால்ய நண்பரின் நிஜ வாழ்க்கை உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து அப்பொழுது வாழ்ந்த இரு சாதி தலைவர்கள் பசுபதி பாண்டியன், வெங்கடேச பண்ணையார் இருவரின் பகையை மேலோட்டமாக கலந்து ‘பைசன்’ திரைப்படத்தை தன்னுடைய அக்மார்க் கலவைகளுடன் சரிநிகராக ஃபிளாஷ்பேக் காட்சிகளுடன் ஒரு கபடி வீரரின் பயோபிக்கை கச்சிதமாக கொடுத்து இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.இதில் இரு சாதியினரின் சண்டையை விட, இரு சாதிக்குள் இருக்கும் ஈகோ, பழிவாங்க காத்திருக்கும் உள்பகை, சமயம் பார்த்து போட்டுத்தள்ள துடிக்கும் அடியாட்கள் என்று கபடி வீரரைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், வீண் பழிக்கு ஆளாக வேண்டிய சூழலில் சிக்கித் தவிக்கும் வீரர், அதற்காக தவறான பாதையை தேர்ந்தெடுக்க விடாமல் மகனை திசை திருப்பி, விளையாட்டில் ஈடுபட வைக்கும் பாசமிகு தந்தையின் தியாகத்துடன், உடற்கல்வி ஆசிரியரின் துணையுடன், தன் சமூகத்தை வழிநடத்த பல தடைகளை தாண்டி அசாத்திய வலிமை, தைரியம், விடாமுயற்சியால் வெற்றி காணும் ஒரு துடிப்புமிக்க இளைஞனின் கதையை உயிரோவியமாக ரத்தமும் சதையுமாக கொடுத்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.மொத்தத்தில் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், பி.ஏ. ரஞ்சித், அதிதி ஆனந்த் இணைந்து தயாரித்துள்ள மாரி செல்வராஜின் பைசன் அடக்குமுறை, வன்முறை, ரத்தம் தெறிக்கும் போர்களத்தில் ஈடுபடாமல் விடாமுயற்சியுடன் இலக்கையடையும் பயமறியா ஆக்ரோஷ விளையாட்டு கபடி வீரரின் அசாத்திய சாகச பயணம்.

இந்த பைசன் இந்த வருட தீபாவளி கொண்டாட்டமாகவும், நம் உள்ளங்களில் ஜாதி வெறியை ஒழிக்கவும், யாரேனும் ஜாதி வெறி தூண்டினால் அவர்களை பட்டாசு போல் வெடித்து சிதறடிக்கவும், நாம் தயங்க கூடாது. இதுதான் இந்த படத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம், படத்தை திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக ரசிக்க வாருங்கள்.