‘மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு

206

தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அகண்டா’. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பிரக்யா ஜெய்ஸ்வால், பூர்ணா, ஸ்ரீகாந்த், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கு பேசும் மாநிலங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியிட்ட தேதி முதல் வசூலில் சாதனை படைத்து வருவதற்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளும் காரணம் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘அகண்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத், தமிழில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் தமிழில் அறிமுகமாகும் ‘மாயோன்’ படத்திலும் பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அவருடைய கடினமான உழைப்பை பாராட்டி ‘மாயோன்’ பட குழுவினர், ‘அகண்டா’ படத்திற்கும், ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத்திற்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.