’பம்பர்’ விமர்சனம்

89

நடிகர்கள் : வெற்றி, ஹரிஷ் பெராடி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி, ஜிபி முத்து, தங்கதுரை, கல்கி, திலீபன், அருவி மதன், ஆதிரா, செளந்தர்யா
இசை : கோவிந்த வசந்தா
ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி
இயக்கம் : எம்.செல்வகுமார்
தயாரிப்பு : வேதா பிக்சர்ஸ் – எஸ்.தியாகராஜன் பி.இ மற்றும் டி.ஆனந்தஜோதி எம்.ஏ,பி.எட்

சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நாயகன் வெற்றியை ஒரு மனிதனாக யாரும் மதிப்பதில்லை. அவரும் அவருடைய முறை பெண்ணுமான ஷிவானியும் காதலிக்கிறார்கள். ஆனால், ஏழையான வெற்றிக்கு பெண் தர ஷிவானி பெற்றோர் மறுக்கிறார்கள். இதற்கிடையே சூழ்நிலை காரணமாக கேரளா செல்லும் வெற்றி அங்கு ஒரு லாட்டரி சீட்டு வாங்குகிறார். அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு கிடைக்கிறது. இந்த தகவல் வெற்றி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு தெரிந்ததும், அவருடைய நிலையே மாறுவதோடு, அந்த பணத்தை அவர் பெறுவதில் சில சிக்கல்களும் ஏற்படுகிறது. அந்த சிக்கல்கள் என்ன? அந்த பணம் வெற்றிக்கு கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘பம்பர்’ படத்தின் மீதிக்கதை.

லாட்டரி சீட்டை மையமாக வைத்துக்கு முழுமையான கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.செல்வகுமார், திரைக்கதையை சுவாரஸ்யமாகவும், காட்சிகளை விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.

காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சி, செண்டிமெண்ட் என படத்தில் அனைத்து அம்சங்களையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் எம்.செல்வகுமார், பணம் ஒருவனை எப்படி எல்லாம் மாற்றும், அதே பணத்தால் ஒருவருக்கு எப்படி எல்லாம் ஆபத்து வரும் என்பதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் வெற்றி புலி என்ற கதாபாத்திரத்தில் சீறி பாய்ந்திருக்கிறார். தவறு செய்துகொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் போதும் சரி, லாட்டரி மூலம் பல கோடி பணம் கைக்கு வரப்போகும் நிலையிலும் சரி மாறுபட்ட நடிப்பால் கவர்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஷிவாணி, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். மாடனான பெண்ணாக அறியப்பட்ட அவர், இந்த படத்தில் அடக்கம் ஒடுக்கமான பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார்.

படத்தின் மற்றொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு ஹரிஷ் பெராடியின் வேடம் அமைந்திருக்கிறது. வயதான இஸ்லாமியர் வேடத்தில் நடித்திருக்கும் அவர் ஒட்டு மொத்த படத்திற்கும் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். அவரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அதில் அவர் நடித்த விதம் சிறப்பு.

கவிதா பாரதி, ஜி.பி.முத்து, தங்கதுரை, கல்கி, திலீபன் மற்றும் ஹரிஷ் பெராடியின் குடும்பத்தாராக நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி இதுவரை திரைப்படங்களில் பார்த்திராத தூத்துக்குடி பகுதிகளை காட்சிப்படுத்தியிருப்பதோடு, கேரளாவின் அழகை கூடுதல் அழகாக காட்டி கண்களுக்கு விருந்தளிக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

கமர்ஷியல் படமாக இருந்தாலும், பல்வேறு நல்ல விஷயங்களை ரசிக்கும்படியும், கைதட்டல் பெறும் விதத்திலும் சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.செல்வகுமாருக்கு, இந்த ‘பம்பர்’ நிச்சயம் மாபெரும் பரிசாக அமையும்.

ரேட்டிங் 4/5