இப்படி பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கல: தோனி வருத்தம்!

686

தோல்வி குறித்துப் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பௌலர்களின் உழைப்பை பேட்ஸ்மேன்கள் வீணடித்துவிட்டனர் என வருத்தம் தெரிவித்தார். 168 ரன்கள் இலக்கை துரத்திக்கொண்டு சென்ற சென்னை அணியில் ஷேன் வாட்சன் மட்டும் அரை சதம் கடந்து அணிக்கு உதவினார். மற்ற அனைவரும் ரன் சேர்க்கத் தவறியதால், 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்ந்தது.

“மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால், எங்களுக்கு தொடர்ச்சியாக மூன்று, நான்கு விக்கெட்கள் பறிபோனது. கடைசி நேரத்தில் ஒரு பேட்ஸ்மேனாவது அதிரடியாக விளையாடியிருந்தால், முடிவு வேறுமாதிரி வந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.

“பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். டுவைன் பிராவோ 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதேபோல், கர்ன் ஷர்மா நெருக்கடியான நேரங்களில் விக்கெட்களை வீழ்த்தியதால் கொல்கத்தா அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்ட நேரத்தில், பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர்” எனக் கூறினார்.

மகேந்திரசிங் தோனி 4ஆவது வரிசையில் களம் கண்டு, 11 ரன்கள் மட்டும் சேர்த்து வருண் சக்கரவர்த்தியிடம் வீழ்ந்தார். அடுத்துக் களமிறங்கிய டாம் கரனும் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். “பந்துகளைச் சரியாகக் கணித்து, ரன்களை ஓடி எடுப்பது முக்கியம். அதைச் சரியாகச் செய்தனர். இருப்பினும், கடைசி மூன்று ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை விளாசாத காரணத்தால் அணி தோல்வியை நோக்கி நகர்ந்தது” எனத் தெரிவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது குறித்துப் பேசிய கேப்டன் தினேஷ் கார்த்திக், அனைத்து வீரர்களையும் பாராட்டிப் பேசினார். குறிப்பாக, டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸிலின் செயல்பாடுகளைப் புகழ்ந்து பேசினார்.