’மாவீரன்’ விமர்சனம்

99

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், இயக்குநர் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு, மோனிஷா பிளஸி, அருவி மதன்
இசை : பரத் சங்கர்
ஒளிப்பதிவு : விது அய்யனா
இயக்கம் : மடோன் அஷ்வின்
தயாரிப்பு : சாந்தி டாக்கீஸ் – அருண் விக்னேஷ்

சென்னையில் குடிசைப்பகுதியில் வசிக்கும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு கார்ட்டூனிஸ்ட் வேலையில் சேர வேண்டும் என்ற ஆசை. அதற்கான முயற்சியில் ஈடுபடும் அவருக்கு அந்த வேலையைல் சேர நாயகி அதிதி ஷங்கர் உதவி செய்கிறார். இதற்கிடையே, சிவகார்த்திகேயனின் குடும்பம் மற்றும் அவர் வசிக்கும் பகுதி மக்கள், அரசு கட்டிக்கொடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார்கள். ஆனால், அந்த குடியிருப்பில் பல பிரச்சனைகளை அம்மக்கள் சந்திக்க, அதையெல்லம் தட்டி கேட்காமல் பயப்படும் சிவகார்த்திகேயன், தனக்கு மட்டும் இன்றி தன் மக்களுக்கும் இருக்கும் பிரச்சனைகளை தான் எழுதும் கார்ட்டூன் கதைகளின் காட்சிகளாக சித்தரித்து எழுதி வர, திடீரென்று அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியால் கோழையான சிவகார்த்திகேயன் மாவிரனாக, அதனால் என்ன நடக்கிறது? என்பதை சொல்வது தான் ‘மாவீரன்’-னின் கதை.

சத்யா என்ற கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கும் சிவகார்த்திகேயன், நடிப்பில் மிகப்பெரிய வித்தியாசம். இதுவரை பார்த்த சிவகார்த்திகேயனாக அல்லாமல் தோற்றம், நடிப்பு என அனைத்திலும் முழுக்க முழுக்க புதிய சிவகார்த்திகேயனாக உருவெடுத்திருப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளின் போது கூட அப்பாவியாக நடித்து அமர்க்களப்படுத்துகிறார். தன்னை பார்த்து எதிரிகள் பயந்தாலும், அவர்களிடம் பம்மும் சிவா, இறுதியில் தன் மக்களுக்காக அமைச்சரை எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் காட்சிகள் மிரட்டல்.

அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கினின் நடிப்பு அமர்க்களம். படம் முழுவதும் வில்லனாக மிரட்டுபவர் இறுதிக் காட்சியில் நடிப்பு எமனாக உருவெடுத்து நிமிர்ந்து நிற்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. அவரது வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு அளவாக பேசி, நம்மை அதிகமாக சிரிக்க வைக்கிறார்.

விஜய் சேதுபதியின் குரல் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. சரிதா, சுனில், மோனிஷா பிளஸ்ஸி ஆகியோரது நடிப்பும் நிறைவு.

விது அய்யனா ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பரத் சங்கரின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.

சமூக பிரச்சனையை மையப்படுத்திய கதை என்றாலும் அதை நகைச்சுவையாக திரைக்கதையை நகர்த்தி செல்லும் இயக்குநர் மடோன் அஷ்வின், மக்கள் பிரச்சனையை அழுத்தமாகவும் பேசியிருக்கிறார்.

குடிசைமாற்று வாரியங்கள் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் குடிசைப்பகுதி மக்களின் அவல நிலையை தெளிவாக பதிவு செய்திருப்பதோடு, நமக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காண நாம் தான் போராட வேண்டும் என்ற கருத்தையும் மக்களிடம் எளிமையான முறையில் கொண்டு சேர்க்கிறார் இயக்குநர் மடோன் அஷ்வின்.

வழக்கமான ஹீரோவை மையப்படுத்திய ஆக்‌ஷன் கமர்ஷியல் கதை தான் என்றாலும், அதை சமூக அக்கறையோடும், வித்தியாசமாகவும் சொல்லி அனைத்து தரப்பு ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் மடோன் அஷ்வின், இந்த ‘மாவீரன்’ படத்தில் தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

ரேட்டிங் 4/5