‘டைனோசர்ஸ்’ விமர்சனம்

80

நடிகர்கள் : உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, மனக்‌ஷா, ஜானகி, அருண்
இசை : போபோ சசி
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் வி.ஆனந்த்
இயக்கம் : எம்.ஆர்.மாதவன்
தயாரிப்பு : கேலக்ஸி பிக்சர்ஸ் – ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

வட சென்னை தாதாவான மனக்‌ஷா, தனது பகுதி இளைஞர்களை வைத்து ரவுடிசம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நாயகன் உதய் கார்த்திக், மற்றவர்களை கலாய்ப்பது, வெறுப்பேற்றுவது என்று ஜாலியாக இருந்தாலும், ரவுடிசம் என்ற வட்டத்திற்குள் போக கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். உதய் கார்க்கின் அண்ணன் ரிஷியும் அதே தெளிவோடு இருப்பதொடு, ரவுடிசத்தில் ஈடுபட்டிருந்த தனது நண்பன் மாறாவையும் திருத்தி நல்வழிப்படுத்துகிறார்.

இதற்கிடையே, என்றோ நடந்த ஒரு கொலை குற்றத்திற்காக மனக்‌ஷாவின் ஆட்களை போலீஸ் சரணடைய சொல்கிறது. அதன்படி, அனைவரும் சரணடைய அதில் முக்கிய நபராக இருந்த மாறாவுக்கு திருமணமாகி சில நாட்கள் ஆவதால், அவருக்கு பதில் எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடாத ரிஷி சரணடைகிறார்.

தனக்காக சம்பவங்கள் செய்த இளைஞர்கள் சிறைக்கு சென்றுவிட்டதால் புதியவர்களை உருவாக்க நினைக்கும் தாதா மனக்‌ஷா, நாயகன் உதய் கார்த்திக்கையும், மாறாவையும் ரவுடிசத்திற்குள் இழுக்க முயற்சிக்கிறார். இதனால், உதய் கார்த்திகின் வாழ்க்கை என்னவானது என்பதை விறுவிறுப்பாகவும், ஜாலியாகவும் சொல்வது தான் ‘டைனோசர்ஸ்’.

’டை னோ சர்ஸ்’ (Die No Sirs) ”இறக்க வேண்டாம் ஐயா” என்ற அர்த்தம் கொண்ட வார்த்தையை ‘டைனோசர்ஸ்’ என்ற தலைப்பாக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இயக்குநர் எம்.ஆர்.மாதவன், படத்தையும் அதேபோல் வித்தியாசமான முறையில் சொல்லி ரசிகர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.

மண் என்ற ஆற்றல் மண் என்ற கதாபாத்திரத்தில் வட சென்னை இளைஞராக நடித்திருக்கும் உதய் கார்த்திக், தனது அசால்டான நடிப்பு மூலம் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார். இவர் செய்யும் அலப்பறைகள் அனைத்தும் திரையரங்கே அதிரும் அளவுக்கு சிரிக்க வைக்கிறது. காதலியுடனான பயணம், போலீஸையே கலங்கடிக்கும் அளவுக்கு கலாய்ப்பது, வில்லனை எதிர்த்தாலும் ரவுடிசம் பக்கம் போகாமல் வெறுப்பேற்றியே சாகடிப்பது, என்று அனைத்து ஏரியாவிலும் ரவுண்டு கட்டி விளையாடும் உதய் கார்த்திக், கோடம்பாக்கத்தில் முன்னணி ஹீரோவாக பெரிய ரவுண்டு வருவதற்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருப்பதை, இந்த ஒத்த படத்தில் மொத்தமாக நிரூபித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சாய் பிரியா தேவாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், ரசிகர்கள் நெஞ்சில் காதல் தீயை பற்ற வைக்கும் விதத்தில் இருக்கிறார்.

துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாறா, முக்கிய வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். உதய் கார்த்திக்கின் அண்ணனாக நடித்திருக்கும் ரிஷி, ஆரம்பத்தில் அமைதியாக இருப்பவர், சிறையில் தன்னை எச்சரிக்கும் ரவுடி கோஷ்டிக்கு பதிலடி கொடுக்கும் காட்சிகளில் மிரட்டுகிறார்.

சாலையார் என்ற கதாபாத்திரத்தில் தாதாவாக நடித்திருக்கும் மனக்‌ஷா மற்றும் அவரது எதிரணி கேங்க்ஸ்டர் தலைவராக கிளியப்பன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் கவின் ஜெய் பாபு இருவரும் போட்டி போட்டு மிரட்டியிருக்கிறார்கள்.

உதய் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, துலுக்கானம் என்ற வேடத்தில் நடித்திருக்கும் அருண் என சிறிய வேடங்களில் நடித்திருப்பவர்கள் கூட ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

வட சென்னையை இரத்தம், சதையுமாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி.ஆனந்த், கதாப்பாத்திரங்களுடன் படம் பார்ப்பவர்களையும் வட சென்னையில் பயணிக்க வைக்கிறார்.

போபோ சசியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹாட்டாகவும், ஸ்வீட்டாகவும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்கு ஏற்றபடி பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் கலைவாணன், இயக்குநர் சொல்ல வந்ததை மிக தெளிவாக சொல்லியிருப்பதோடு, முதல் பாதி படத்தை படுவேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார். அதே பாணியை இரண்டாம் பாதியிலும் கையாண்டிருக்கலாம். ஆனால், சில காட்சிகளை வெட்டாமல் வேடிக்கை பார்த்திருப்பது படத்தின் பலத்தை சற்று குறைத்திருக்கிறது.

கலை இயக்குநர் வலம்புரிநாதன் செட் எது நிஜம் எது என்று தெரியாதபடி பணியாற்றியிருக்கிறார். பாய்ஸ் பார்க் மற்றும் அதனுள் இருக்கும் ஓவியங்கள் மூலம் செட் பிராப்பர்ட்டிகளின் மூலமாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

வழக்கமான வட சென்னை ரவுடிசம் கதையாக இருந்தாலும், அதற்கு வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் எம்.ஆர்.மாதவன், விறுவிறுப்பான காட்சி, அனல் பறக்கும் வசனங்கள் மூலம் நம்மை சீட்டில் கட்டிப்போட்டு விடுகிறார். வட சென்னை படங்களுக்கான சில வழக்கமான அடையாளங்கள் படத்தில் இருந்தாலும், கெட்டை வார்த்தைகள் இல்லாமல் வசனங்களை கையாண்டிருப்பது பெரும் ஆறுதல்.

ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கும் படம் 15 நிமிடங்களுக்குப் பிறகு சூடு பிடித்து சுறுசுறுப்பாகிறது. அதிலும், சிக்கியவனை சிதைக்க பிளான் போடும் அந்த காட்சி பரபரப்பின் உச்சம். ஒரே இடத்தில் நீளமாக பயணித்தாலும் அந்த காட்சியில் இருக்கும் பரபரப்பு, நம்மை சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, அதை தொடர்ந்து வரும் இடைவேளை அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

முதல் பாதிக்கு பிறகு இரண்டாம் பாதி இப்படி தான் போகும், என்ற பார்வையாளர்களின் யூகங்களை பொய்யாக்கி கதையை வேறு பாதையில் பயணிக்க வைக்து சபாஷ் சொல்ல வைக்கும் இயக்குநர் வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார்.

படத்தில் பிரபலமான நடிகர்கள் யாரும் இல்லை என்றாலும், ஒவ்வொரு நடிகர்களையும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கும் விதத்தில் வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் வட சென்னை கதைக்களத்தை வழக்கமான பாணியில் சொல்லாமல் புதிய பாணியில் சொல்லியிருப்பது, முழு படத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்தி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 4/5