ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில்’ஹர்காரா’ ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில்!

74

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில், தொடர்ந்து  தரமான வெற்றி  திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு,  இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு,  ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து இயக்கியிருக்கும் ‘ஹர்காரா’ இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் வித்தியாசமான படமாகும். இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

’வி 1 மர்டர் கேஸ்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ  இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும்,  அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக  நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி  நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள ’ஹர்காரா’ திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.