’ஜவான்’ விமர்சனம்

83

நடிகர்கள் : ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியா மணி
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : ஜி.கே.விஷ்ணு
இயக்கம் : அட்லீ
தயாரிப்பு : ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்

ராணுவ வீரரான ஷாருக்கான், ராணுவத்துறையில் நடந்த ஒரு மோசடி குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். அதனால், பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஷாருக்கானை தேசதுரோகியாக முத்திரை குத்தி கொலை செய்துவிடுகிறார். ஷாருக்கானின் மனைவி தீபிகா படுகோனே கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்ல, அங்கே அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனவுடன், தனது அப்பாவின் மீது விழுந்த களங்கத்தை துடைப்பதோடு, அரசியல்வாதிகளால் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களுக்காக புதிய வழியில் போராட்டம் ஒன்றை அறங்கேற்றுகிறார். அது என்ன? அதை எப்படி செய்கிறார்? என்பதை அதிரடியாகவும், அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ஷாருக்கான், முழு படத்தையும் சுமந்திருக்கிறார். விக்ரம் ரத்தோர் மற்றும் அசாத் என இரண்டு வேடங்களிலும் நடிப்பில் பல பரிணாமங்களை வெளிக்காட்டி அசத்தும் ஷாருக்கான், மகனாக நடிக்கும் போது இளமையாக இருப்பது வியக்க வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா, அழகியாக மட்டும் அல்லாமல் அதிரடியாகவும் நடித்திருக்கிறார். ஆரம்பத்திலேயே ஆக்‌ஷன் காட்சியோடு அறிமுகமாகி அதன் பிறகு காதல் காட்சிகள் மூலம் அழகியாக ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, வழக்கம் போல் தனது உடல்மொழியால் மிரட்டியிருக்கிறார். அவருடைய கெட்டப் மற்றும் வித்தனம் இரண்டுமே புதிதாக இருப்பதோடு, ரசிகர்களிடம் கைதட்டலும் பெறுகிறது.

தீபிகா படுகோனே சிறிய வேடம் என்றாலும், ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும்படி நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் இதயத்தை கனக்க செய்கிறது.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பெரிய ஹிட் என்றாலும் காட்சிகளுடன் பார்க்கும் போது திரையரங்கே ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு கைகொடுத்திருக்கிறது. பீஜியம் மற்றும் குட்டி பாடல்கள் அனிருத்தின் இசை படத்தின் குறைகளை நிறைகளாக மாற்ற உதவியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் இருக்கிறது. அதிலும், இரட்டை வேட காட்சிகளை அவர் கையாண்ட விதம் மிகச்சிறப்பு. எந்த ஒரு இடத்திலும் துளி குறை கூட இல்லாமல் தொழில்நுட்பத்தை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

கோலிவுட்டையே மிரளச் செய்த அட்லீ ‘ஜவான்’ மூலம் பாலிவுட்டையும் மிரள வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டு. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதை, வேகமான காட்சி என்று படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் அட்லீ, சமூகத்தில் நடக்கும் அரசியல் அவலங்கள் பற்றி தைரியமாக பேசியிருக்கிறார்.

பெரும் தொழிலதிபர்களுக்கு ஆயிரக்கணக்கான வங்கி கடனை தள்ளுபடி செய்த அரசு, விவசாயிகளின் ஒரு சில ஆயிரம் ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்யாதது ஏன்?, உலக நாடுகள் தவிர்க்கும் தொழிற்சாலைகள் இந்தியாவில் மட்டும் தொடங்கப்படுவது ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைத்திருக்கும் இயக்குநர் அட்லீ, மிகப்பெரிய அரசியல் படத்தை மிகப்பெரிய கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்து சமூக ஆர்வலர்களுடன் ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 4/5