’மார்க் ஆண்டனி’ விமர்சனம்

96

நடிகர்கள் : விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரிது வர்மா, ஒய்.ஜி.மகேந்திரன், அபிநயா, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம்
இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்பு : மினி ஸ்டுடியோ – வினோத் குமார்

பெரிய ரவுடிகளான ஆண்டனியும், ஜாக்கி பாண்டியனும் நெருங்கிய நண்பர்கள். ஆண்டனியை எதிரிகள் கொலை செய்துவிடுவதால், அவரது மகன் மார்க்கை வளர்க்கும் ஜாக்கி பாண்டியன் அவர் மீது அதிகம் பாசம் காட்டுகிறார். இதனால், ஜாக்கி பாண்டியனின் மகன் மதன் பாண்டியன் அவரை வெறுக்கிறார். அதே சமயம், மார்க் தனது அம்மாவை கொலை செய்தது தனது தந்தை ஆண்டனி தான் என்று நினைத்து அவரை வெறுக்கிறார்.

இதற்கிடையே, ஆண்டனியின் மகன் என்பதால் மார்க்கின் காதலி ரிது வர்மா அவரை விட்டு பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், மன வேதனையில் இருக்கும் மார்க்கிற்கு இறந்த காலத்தில் பேசக்கூடிய அதிசய போன் ஒன்று கிடைக்கிறது. அந்த போன் மூலம் இறந்த தனது அம்மாவிடம் பேச முயற்சிக்கும் மார்க், தனது அப்பா நல்லவரா? அல்லது கெட்டவரா? என்பதை அறிந்துக்கொள்வதோடு, தனது அம்மாவை கொலை செய்தவர் யார்? என்பதையும் தெரிந்துக்கொள்கிறார். பிறகு அவர் என்ன செய்தார்?, அவரது அம்மாவை கொலை செய்தது யார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘மார்க் ஆண்டனியின்’ மீதிக்கதை.

ஆண்டனி மற்றும் மார்க் என்ற இரண்டு வேடங்களில் மாஸாகவும், கிளாஸாகவும் நடித்து விஷால் அசத்துகிறார். அப்பா விஷால் அடிதடியில் அசத்தினால், மகன் விஷால் சாதுவாக நடித்து நடிப்பில் அசத்துகிறார்.

விஷால் நாயகன் என்றால், அவருக்கு ஒரு படிமேல் என்ற ரீதியில் எஸ்.ஜே.சூர்யா பட்டய கிளப்பியிருக்கிறார். ஜாக்கி பாண்டியன் மற்றும் மதன் பாண்டியன் என்று அப்பா, மகன் வேடங்களில் அலப்பறை செய்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா பல இடங்களில் படத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு திரை ஆட்சி செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலைய குறையில்லாம் செய்திருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி ரசிகர்களை சிரிக்க வைக்க போராடி தோல்வியடைந்திருக்கிறார். பட முழுவதும் வந்தாலும் சுனிலுக்கு சொல்லி கொள்ளும்படியான காட்சிகள் இல்லை.

அபிநயா, நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் குறை சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்கள்.

இரண்டு ரவுடிகளுக்கு இடையிலான நட்பு மற்றும் துரோகம் என்ற வழக்கமான ஃபார்மட்டை வைத்துக்கொண்டு, டைம் டிராவலர் தொலைபேசி என்ற புதிய யோசனையோடு, முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான கமர்ஷியல் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கும் இயககுநர் ஆதிக் ரவிச்சந்திரன், அதை ரெட்ரோ டோன் பின்னணியில் சுவாரஸ்யமான படமாகவும் கொடுத்திருக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படம் முழுவதையும் மாஸாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளை மிரட்டளாக படமாக்கியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசை சூப்பராக இருக்கிறது.

படத்தின் மையக்கருவை ரசிகர்களுக்கு மிக சரியாக புரிய வைக்கும் விதத்தில் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி, படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயண், கலை இயக்குநர் ஆர்.கே.விஜய்முருகன், ஆடை வடிவமைப்பாளர் சத்யா.என்.ஜே மற்றும் ஒப்பனை கலைஞர் சக்தி ஆகியோர் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. இவர்களது பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

டைம் டிராவலர் தொலைபேசியை வைத்துக்கொண்டு ஒரு மாஸான படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதோடு, ரசிகர்களை படத்துடன் பயணிக்க வைத்து கொண்டாட வைத்திருக்கிறார்.

சில்ஸ் ஸ்மிதா வரும் காட்சி, அப்பா மற்றும் மகன் எஸ்.ஜே.சூர்யா இடையிலான போன் பேச்சு, தந்தி விஷாலின் மாஸான காட்சிகள் என படத்தின் பல இடங்களில் ரசிகர்களை கைதட்ட வைத்திருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நான்கு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் இறந்தகாலம் மற்றும் நிகழ்கால சம்பவங்களை சரியான முறையில் கோர்வையாக்கி, ரசிகர்கள் கொண்டாடும் படமாக கொடுத்திருக்கிறார்.

ரேட்டிங் 4/5