அஷ்வின் காக்கமனு தன்னுடைய கூட்டாளிகளுடன் காவல்துறை சேர்ந்த அதிகாரிகளை கூட்டாக கொல்வது போல் கதைக்களம் தொடங்குகிறது. சில வருடங்களுக்கு பிறகு புதிய கான்ஸ்டபிளாக பொறுப்பெற்க வரும் அகிலனுடன் (அதர்வா) சேர்த்து ஆறு பேர் காவல் நிலையத்திற்கு வருகின்றனர். அவர்கள் பணியில் சேருவதற்கு முன்பே இரவு ரோந்து பணிக்கு அனுப்புகிறார் உயர் போலீஸ் அதிகாரி. அப்பொழுது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அந்த நபர் தப்பி அருகில் உள்ள இரும்பு தடுப்புக்கள் நிறைந்த ஒரு குடிசை பகுதிக்குள் சென்று மாயமாகிறார். அவரை பின் தொடர்ந்து செல்லும் அகிலன் மற்றும் குழு அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத வசிப்பிடமாக இருப்பதை உணர்ந்து இரண்டு இரண்டு பேர்களாக பிரிந்து மர்ம நபரை தேடுகின்றனர். குடிசை பகுதிக்குள் அவர்கள் அஷ்வின் காக்கமனு தலைமையில் சில சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் சதித்திட்டங்கள் நடைபெறுவதை காண்கிறார்கள். அதற்குள் அங்கிருக்கும் அடியாட்களால் போலீஸ் கான்ஸ்டபிள்கள்களை ஒருவர் பின் ஒருவராக கொல்கிறார்கள். அங்கிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் தப்பிக்க முடியாமல் திணரும் அகிலன் அங்கே ஒரு வீட்டிலிருக்கும் பெண்மணியை பார்த்து உதவி கேட்கிறார். ஆனால் அந்த பெண்மணி அங்கிருந்து உடனே சென்று விடுமாறு எச்சரிக்கிறார். அதே சமயம் கான்ஸ்டபிள்களின் வேலையில் சேர இருக்கும் உத்தரவு கடிதம் அங்கே இருப்பதையும், தன் காதலி கைதியாக இருப்பதையும் அறிந்து அகிலன் அதிர்ச்சியாகிறார். அந்த குடியிருப்பு பகுதியில் நடக்கும் சதி வேலைகள் என்ன? அவர்கள் யாரை குறி வைத்து பழி வாங்க காத்திருக்கிறார்கள்? அகிலனால் அங்கிருந்து உயிரோடு தப்ப முடிந்ததா? காதலியையும், உயிN;ராடு இருக்கும் சில கான்ஸ்டபிள்களையும் மீட்டாரா? அகிலனுக்கும் அஸ்வின் காக்கமனுவிற்கும் இருக்கும் பகை என்ன? அதற்காக யாரை பழி வாங்க அஸ்வின் நினைக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கான்ஸ்டபிள் அகிலனாக அதர்வா கதையின் நாயகனாக முதலில் பெற்றோரை மதிக்காமல் இருப்பதும், பின்னர் அவர்களின் வலிகளை புரிந்து கொண்டு மனம்மாறி பொறுப்புள்ள இளைஞனாக வேலையில் சேரும் காட்சிகள், காதலுக்காக எடுக்கும் முயற்சிகள், புரியாத புதிரான ரோந்து பணியில் மாட்டிக் கொண்டு தவிப்பதும், சக தோழர்களை மீட்க முடியாமல் பரிதவிப்பதும், தப்பிக்க தேடும் வழிகள், முக்கிய பணியை இறுதிவரை போராடி காப்பாற்றும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் நிறைவான நடிப்பு படத்திற்கு பலம்.முதல் காட்சியில் காதலிப்பதற்கும், இறுதி காட்சியில் காப்பாற்றப்படும் காதலியாக லாவண்யாவின் பங்களிப்பு குறைவு.இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு வில்லனாக களமிறங்கி சரிசமமான பங்களிப்புடன் உணர்ச்சிகள் நிறைந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள், வங்கிக்கடன், விவசாயத்திற்கான போராட்டம், போலீஸ் மீது ஏற்படும் வெறுப்பு என்று அனைத்து சம்பவங்களுக்கும் இணைப்பு பாலமாக கதையின் மையப்புள்ளியாக படம் முழுவதும் தன் ஆக்ரோஷமான நடிப்பும் வெறுப்பு ஏற்படாத வண்ணம் அமைத்திருக்கும் விதத்திலும் கவனத்தை ஈர்க்கிறது.
ஷா ரா, பாரத், லக்ஷ்மி பிரியா, பரணி, அழகம் பெருமாள் மற்றும் பலர் படத்திற்கு அச்சாணிகளாக இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் குடிசைப்பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சிகள், ஃபிளாஷ்பேக் காட்சிகள், சுரங்க பாதைகள், பதட்டமான சூழ்நிலையில் டணலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகள் என்று பரபரப்புடன் நகர்த்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் மற்றும் பின்னணி இசை பதட்டத்தையும், அதிர்வையும் ஏற்படுத்தி பயத்தின் உணர்வை கடத்தியுள்ளது.
ஆர். சக்தி சரவணன் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியில் கலக்கியுள்ளது.
படத்தொகுப்பாளர் கலைவண்ணன் சுறுசுறுப்பாக தோய்வில்லாத வகையில் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
2017 முதல் 2023 வரை வில்லன் மற்றும் காதல் என்று இரண்டு ஃபிளாஷ்பேக்குகள் விவசாயம், காவல்துறை துரோகம், கார்ப்பரேட் தலையீடு, வங்கி லோன், நிலத்தை அபகரித்தல் என்று காலவரிசைகளை கையாளும் முயற்சியுடன், 6 போலீஸ் கான்ஸ்டபிள்கள் மாட்டிக் கொண்டு தவிப்பது, அவர்களை மாட்டி விட்டு தடுமாறும் உயர் அதிகாரிகள், அவர்களை பழி வாங்க துடிக்கும் வில்லன், சுரங்க பாதையை வடிவமைத்து வங்கிகளில் கொள்ளையடிக்க எடுக்கும் சதி திட்டங்கள், ஒட்டு மொத்த போலீஸ்குழுக்களையே பழி வாங்க எடுக்கும் முயற்சிகள் அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் குடிசைப்பகுதி என்று பரந்து விரியும் காட்சிகள் இரவில் மெருகூட்டப்பட்ட ஒளிப்பதிவுடன் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சரசரவென்று காட்சிகள் விரிவடைந்து வேகமான மற்றும் அற்புதமான ஒட்டு மொத்த திரைக்கதையும் பரபரப்பாக கொடுத்து பார்வையாளர்களை இணைத்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் ரவீந்திர மாதவா.