இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது
வழக்கமான த்ரில்லர் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டு, த்ரில்லர் கதைகள் முடியும் இடத்தில் இருந்து தொடங்கும் ‘ஸ்டீபன்’ டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தக் கதையை அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ளார். கோமதி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் மைக்கேல் தங்கதுரை மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைமுக நோக்கங்கள், கொலைகள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் என கதை முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருக்கும். 40 நிமிட குறும்படமாக இருந்த இந்த கதை, ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் திரைக்கதையாக்கத்திற்கு பின்பு திரைப்படமானது.

குறும்படமாக இருந்த கதையை முழு திரைக்கதையாக மாற்ற தேவையான ஒழுக்கம், நேர்மை மற்றும் உழைப்பு என அனைத்தையும் படக்குழு வழங்கியது. இயக்குநர் மிதுனின் தந்தை கதைக்கு தேவையான பட்ஜெட் வழங்கி ஆதரவு கொடுக்க கதையின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மிதுன் கதை மீது முழு கவனம் செலுத்தினார். ’ஸ்டீபன்’ கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை கோமதி சங்கர் அட்டகாசமாக திரையில் பிரதிபலித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் ஸ்டீபன் கதாபாத்திரத்தை முதலில் கற்பனை செய்ததற்கும் அப்பால் கதை வளர்ந்தது. சிறிய குறும்படமாக ஆரம்பித்த இந்தக் கதை பலகட்ட ஆய்வு, சிந்தனை மற்றும் தைரியத்திற்கு பிறகு முழு திரைக்கதையானது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ‘ஸ்டீபன்’ என அனைவருக்கும் பரிச்சயமான பெயரைத் தேர்வு செய்தோம். இந்தப் படம் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா அவரது சேமிப்பில் இருந்து இந்தப் படத்திற்கு நிதி கொடுத்தார். அந்தப் பொறுப்போடு சேர்த்து இயக்கம், எழுத்து, தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு என பல பணிகளை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ‘ஸ்டீபன்’ படத்தைப் பார்க்க ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
நடிகர் மற்றும் இணை எழுத்தாளரான கோமதி சங்கர் கூறுகையில், “’ஸ்டீபன்’ கதையை எழுதுவதில் நானும் பங்களித்திருப்பதால் அந்தக் கதபாத்திரத்துடன் என்னால் ஆழமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. நாங்கள் உருவாக்கிய இந்தக் கதை உலகம் பரபரப்பானதாகவும் அமைதியற்றதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் இருந்தது. அதனால், ஒரு நடிகனாக இந்தக் கதையில் நடித்திருப்பது எனக்கு சவாலான விஷயம்தான். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நேர்மையுடன் எடுத்திருக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ‘ஸ்டீபன்’ திருப்தியான உணர்வை தரும்” என்றார்.
உளவியல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘ஸ்டீபன்’ யார் என்பதற்கு பதிலாக ஏன் என்று உங்களை யோசிக்க வைக்கும்.
டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.