ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்

76

இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் ‘சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி திரை உலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன்,  பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

:சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ எனும் இப்படத்தின் முதல் பாகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

தற்போது ‘சலார் -பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் அவர் கதாபாத்திரத்திற்கு அவரே சொந்த குரலில் பின்னணி பேசுகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரே பின்னணி பேசுகிறார். அவரது இந்த முயற்சி திரையுலகினரிடம் மட்டுமல்லாமல் ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான ‘வீரசிம்ஹ ரெட்டி’, ‘வால்டேர் வீரய்யா’ எனும் இரண்டு தெலுங்கு படங்களும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை  படைத்திருக்கிறது என்பதும், அவர் தற்போது ‘ஹாய் நான்னா’, மற்றும் ‘தி ஐ’ எனும் தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.