குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் நாட்டை கெடுக்கும்.. குடிப்பழக்கத்தால் தானும் அழிந்து இந்த சமுதாயத்தையும் சீரழிக்கிறார்கள் என்பதை விளக்கும் அருமையான கருத்துள்ள படம் தான் கிளாஸ்மேட்,
ஹீரோ அங்கையற்கண்ணன் ஆல்கஹாலுக்கு அடிமையானவர். அவருடைய மாமன்காரரும் அதே ரகம். இருவரும் இணைபிரியாமல் எந்த நேரமும் போதையை ஏற்றிக்கொண்டு திரிவதால் சின்னச் சின்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பெரியளவிலான சிக்கல் அவர்களைச் சூழ்கிறது.
அது என்ன மாதிரியான சிக்கல்? அதிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? குடிப்பழக்கத்துக்கு குட் பை சொல்ல முடிந்ததா? இப்படியான கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில்கள் இருக்கிறது… இயக்கம் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி
நாயகன் அங்கையற்கண்ணனும், இயக்குநர் சரவண சக்தியும் குடிக்கு அடிமையானவர்கள் செய்கிற அத்தனை அடாவடிகளையும் அட்டகாசமாக செய்திருக்கிறார்கள். சரவண சக்தியின் அலம்பல் சலம்பல் கொஞ்சம் கொஞ்சம் கலகலப்பூட்டுகிறது.
ஹீரோவுக்கு ஜோடியாக வருகிற பிரணா அழகாக இளமையாக இருக்கிறார். சரவண சக்திக்கு ஜோடியாக வருபவர் தேகத்தின் செழுமையில் கவர்ச்சியாகத் தெரிகிறார்.
இருவரும் அவரவர் கணவன்மார்களின் குடிபழக்கத்தை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அவர்களுடன் செல்லம் கொஞ்சி பொழுதைக் கழிக்கிறார்கள்.
மயில்சாமி வழக்கம்போல் குடிகாரராக வந்துபோக, நிறைவுக் காட்சியில் அயலி அபி நக்ஷ்த்ரா கதையின் திருப்புமுனையாக நின்று கவனம் ஈர்க்கிறார்.
குடிகாரர்களுக்கு சிகிச்சையளிக்க களமிறங்கி அவர்களைவிட பெரிய குடிகாரராக மாறுகிற கார்த்திக், துபாய் ரிட்டர்ன் பேர்வழியாக கிராமத்து வாய்க்கால் வரப்பில் கோட் சூட்டுடன் திரிகிற சாம்ஸ் இருவரின் ரகளை கொஞ்சமாய் ரசிக்க வைக்கிறது.
அருள் தாஸ், மீனாள் என மற்றவர்கள் நடிப்பில் குறை வைக்கவில்லை.
பிரித்வி இசையில் ‘வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ ஆகிய உற்சாகமான பாடல்களுக்கு, நாயகன் தன் மாமனுடன் குடித்துவிட்டுப் போடும் ஆட்டம் கூடுதல் உற்சாகம் தந்திருக்கிறது.
ஒளிப்பதிவு உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு கச்சிதம்.
கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் குடி நோயாளிகள் என்பதை படம் பார்ப்பவர்களுக்கு முதல் சில காட்சிகளிலேயே உணர வைத்த பின்பும், படம் நெடுக அவர்களை குடிக்க வைத்திருப்பது சலிப்பு.
கடைசி கிளைமாக்ஸ் 10 நிமிட படத்தை படம் முழுக்க சொல்லியிருந்தால் போர் அடித்திருக்கும்… இயக்குனர் தன் திரைக்கதை யுக்தியால் நகைச்சுவை பாடல்கள் என போர் அடிக்காமல் படத்தை நகர்த்தி இருக்கிறார்.
நல்ல மெசேஜ் படம் பார்க்கலாம்.
2.5 / 5
ஹென்றி .ஜி