சென்னை:
நடிகர் & நடிகைகள் :- ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளங்கோ மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘பார்க்கிங்”.
எழுத்து & இயக்கம் :- ராம்குமார் பாலகிருஷ்ணன். ஒளிப்பதிவாளர் :- ஜிஜு சன்னி. படத்தொகுப்பாளர் :- பிலோமின் ராஜ். இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ். தயாரிப்பு நிறுவனம் :- பேஷன் ஸ்டுடியோஸ். தயாரிப்பாளர்கள் :- கே.எஸ். சினிஷ் – சுதன் சுந்தரம்.
சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி கதாநாயகி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். கதாநாயகி இந்துஜா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர். அங்கு குடிபுகுந்த ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவுக்காக புதிதாக கார் ஒன்றை வாங்குகிறார். அந்தக் காரை அவரது வீட்டில் கீழே இருக்கும் ஒரு சிறிய இடத்தில் நிறுத்தி வைக்கிறார். இதனால் அங்கு ஏற்கனவே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்த எம் எஸ் பாஸ்கர் போதுமான இடம் இல்லாமல் தடுமாறுகிறார். இதனால் ஹரிஷ் கல்யாணத்துக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.
இந்நிலையில் பேச்சில் ஆரம்பிக்கும் மோதல், ஈகோ யுத்தமாக உருவெடுத்து யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் நிகழ்கிறது. அது அவர்களுக்குள் பெரிய மோதலாக உருவெடுத்து ஹரிஷ் கல்யாணத்துக்கு பலவிதத்தில் தொந்தரவு கொடுக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். இறுதியில் எம்.எஸ். பாஸ்கர் ஹரிஷ் கல்யாணின் காரை அந்த பார்க்கிங்கில் நிறுத்த விட்டாரா? அதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதுதான்’பார்க்கிங்’ படத்தின் மீதிக் கதை.
சாக்லேட் பாயாக வலம் வந்துகொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண், இப்படத்தில் ஈஸ்வர் என்ற ஐ.டி.துறை இளைஞராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள அவர் தன் கர்ப்பிணி மனைவியை கவனிப்பதில் ஆகட்டும், ஈகோ மோதலில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சதிச்செயல்கள் செய்வதில் ஆகட்டும், அர்ப்பணிப்பு உணர்வுடன் தனித்துவமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும் நேர்த்தியாக கையாள முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
கதாநாயகனின் காதல் மனைவி ஆதிகாவாக இந்துஜா நடித்திருக்கிறார். சவாலான இந்த கதாபாத்திரத்தை ஏற்று, நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் இந்துஜா.
எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அதை தூக்கி நிறுத்துவதில் வல்லவர் என பெயர் பெற்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், இதில் இளம்பரிதி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி செல்வியாக வரும் ரமா, மகள் அபர்ணாவாக வரும் பிரார்த்தனா, வீட்டிற்கு சொந்தக்காரராக வரும் இளவரசு, எல்.ஐ.சி. ஏஜெண்டாக வரும் சுரேஷ் மற்றும் இஸ்திரி கடைக்காரராக வருபவர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சாதாரண பார்க்கிங் பிரச்சனை, மெல்ல மெல்ல வளர்ந்து, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இடையே நடக்கும் தீவிர பிரச்சனையாக ஆக்ரோஷ வடிவம் எடுத்து, கொலைவெறியுடன் பழிவாங்கும் த்ரில்லராக மாறுவதை, சொற்ப கதாபாத்திரங்களை வைத்து மிக மிக அழகான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். மனிதாபிமானத்தோடு ஒருவருக்கொருவர் ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசையும் இயக்குநரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.
மொத்தத்தில் இந்த ‘பார்க்கிங்’ திரைப்படம் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.