குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

59

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றனர். இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன் போது படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களுமான என். வி. பிரசாத், முகேஷ் ஆர். மேத்தா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர். பி. சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான என். வி. பிரசாத் பேசுகையில், ” மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த அதிக திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘குஷி’ திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும். இந்த படத்திற்கு தமிழிலும் பெரும் வரவேற்பு கிடைக்கும். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தா பேசுகையில், ” குஷி படத்தினை கேரளாவில் வெளியிடுகிறேன். கேரளாவை பொறுத்தவரை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பிறகு அதிக அளவிலான ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவிற்குத் தான் இருக்கிறார்கள். இந்த குஷி திரைப்படத்தை கேரளாவில் வெளியிடுவதற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனம் விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ‘குஷி’ திரைப்படத்தை வெளியிடுகிறது. இந்த படமும் மிகப் பெரும் வெற்றியை பெறும். ” என்றார்.

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி பேசுகையில், ” மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘குஷி’ திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை பார்த்தோம். அனைத்தும் கிளாஸாகவும், கிராண்டியராகவும் இருந்தது. இசையும் கமர்சியலாக இல்லாமல், கிளாஸ்ஸிக்காக இருக்கிறது. ஹீரோ விஜய் தேவரகொண்டா- ரியல் பான் இந்தியா ஸ்டார். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்து, அவர் எங்களுக்கும் குஷி தர வேண்டும். இந்த திரைப்படம் அனைத்து இடங்களிலும் பெரிய வெற்றியைப் பெற்று, அனைவருக்கும் குஷியை உண்டாக்கும். பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

நாயகன் விஜய் தேவரகொண்டா பேசுகையில், ” என்னுடைய தமிழ் பையன்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் வணக்கம் . இந்தப் படத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்த குஷி திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும். உங்களை சிரிக்க வைக்கும். ‘பெள்ளி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’.. காலகட்டத்திலிருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. இந்த திரைப்படம் உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.