1979-ம் ஆண்டில் வட சென்னை கடற்கரையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட 17 கிலோமீட்டர் நீளமுள்ள கச்சா எண்ணெய் குழாய் உள்ளூர் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதித்தது என்பது பற்றி இயக்குனர் வெற்றி மாறன் குரல் மூலம் டீசல் கதை ஆரம்பமாகிறது. அனைத்து எதிர்ப்புகளும் தோல்வியடைந்த நிலையில், மனோகர் (சாய் குமார்) தலைமையில் நடந்த போராட்டத்தில் தனது நண்பர்கள் உயிரிழந்து போக, மனோகர் ஒரு வாய்ப்பைக் காண்கிறார்; அவர் ராயபுரம் கடற்கரையில் ஒரு எண்ணெய் கடத்தல் அமைப்பு அமைத்து, எண்ணற்ற உயிர்களை அழித்த அதே குழாயின் நடுவே துளையிட்டு கச்சா எண்ணெய்யைத் திருடி தொழிலதிபர் பதானிடம் (சச்சின் கேடேகர்) விற்று, அதில் வரும் பணத்தில் அந்த கிராம மக்களுக்கு நல்லது செய்து தனக்கே உரித்தான பாதையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.
மேலும் போராட்டத்தில் உயிர் இழந்த தனது நண்பனின் மகன் வாசுவை (ஹரிஷ் கல்யாண்) வளர்ப்பு மகனாகவும் வளர்க்கிறார். டீசல் வாசு (ஹரிஷ் கல்யாண்), தனது வளர்ப்பு தந்தை மனோகர் தொடங்கிய டீசல் மாஃபியா வலையமைப்பில் ஈடுபடுகிறார். கெமிக்கல் இன்ஜினியரான வாசு, தனது தந்தைக்கு துணையாக கச்சா எண்ணெய் திருட்டில் ஈடுபடும் அவர், அதை வெளிமாநில தொழிற்சாலைக்கு அனுப்பி பெட்ரோல் – டீசலாக மாற்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.
இதற்கிடையில் தொழில் எதிரியான பாலமுருகன் (விவேக் பிரசன்னா), மனோகரின் லாரிகளை மடக்கி பெட்ரோல்-டீசலை திருடி, கலப்படம் செய்கிறார். இதை கண்டுபிடிக்கும் வாசு அதிரடியில் இறங்குகிறார். பாலமுருகனுக்கு துணையாக ஊழல் நிறைந்த டிசிபி மாயவேல் (வினய் ராய்) செயல்படுகிறார். தொழிலதிபர் பதானின் கட்டுப்பாட்டில் இவர்கள் இருவரும் செயல்பட்டு சதி வேலை செய்து வாசுவை சிக்கலில் சிக்க வைத்ததால் அவர் தலைமறைவு ஆகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாசுவின் தந்தை மனோகரை போலீஸ் கைது செய்கிறது. அந்த நேரத்தில் 17 கிலோமீட்டர் நீளமுள்ள கச்சா எண்ணெய் குழாயில் இருந்து 2 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் திருட்டு போக நாடே அதிர்ச்சிக்குள் ஆகிறது. யார் எதற்காக இந்த அதிர்ச்சிகரமான திருட்டை நடத்தினார்கள்? திருடப்பட்ட கச்சா எண்ணெய் எங்கே பதுக்கப்பட்டுள்ளது? சிறையில் இருக்கும் மனோகர் என்ன ஆனார்? துலைமறைவாக இருக்கும் வாசு அனைத்து பிரச்சினைகளையும் எப்படி சரிசெய்து காணாமல் போன 2 கோடி லிட்டர் கச்சா எண்ணெயை எப்படி மீட்டெடுத்தார்? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது படத்தின் மீதி கதை.